கோவை: “திரும்பத் திரும்ப எங்கள் கட்சி ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது” என்று அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கோவையில் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தெந்த வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, அளித்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்ற வேண்டும்.
மத்திய அரசு வாக்குறுதிகளை அளிக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது” என்றார்.
யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது குறித்து அவர் கூறும்போது, “திரும்பத் திரும்ப பாஜக ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாஜகவின் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவி செய்கிறது. விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியை போல ஒருவரை கைது செய்வது கருத்து சுதந்திரமா?” என்று கேள்வி எழுப்பினார்.
“இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி முயற்சிகள் மூலம் பாஜகவின் ஆதரவாளர்களை முடக்கிவிடலாம் என்று நினைத்தால் அந்தக் கனவு ஒரு போதும் பலிக்கப் போவதில்லை” என்ற வானதி சீனிவாசன், “தேசியக் கொடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருப்பதை ஒருபோதும் பாஜக மாற்ற நினைக்காது” என்று கூறினார்.
யூடியூபர் கைது பின்னணி:
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் பிரசித்திப் பெற்ற மதுர காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உப கோயில்களில் சுவாமி சிலைகள் பழுதடைந்துள்ளன. அவ்வாறு பழுதான சிலைகளை புனரமைப்பதாகக் கூறி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் கோபிநாத் (33) என்ற யூடியூபர், சமூக வலைதளம் மூலம் பொதுமக்களிடம் 34 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் செயல் அலுவலர் தா.அரவிந்தன் அளித்த புகாரின்பேரில், ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி திவ்யா உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் கைதுக்கு பாஜக மாநில தமிழகத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.