டெல்லி அமைச்சருக்கு ஜூன் 9 வரை காவல் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, வரும் 9 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு, டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான
ஆம் ஆத்மி
கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர்,
சத்யேந்திர ஜெயின்
. உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ‘ஹவாலா’ பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும், ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் ரூ.4 கோடியே 81 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக கடந்த மாதம் அமலாக்கத் துறை அறிவித்தது. நேற்று, இந்த வழக்கில் சத்யேந்திர ஜெயினை அமலாக்கத் துறை அதிகாரிகள் சில மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்தனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.

இந்நிலையில் இன்று, டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை, அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது இந்த வழக்கில் அவரிடம் விசாரிக்க, 14 நாட்கள் அவகாசம் வேண்டும் என, நீதிமன்றத்திடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்டனர். இதை அடுத்து, வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி வரை, டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினை காவலில் வைத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.