லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர், யூ-டியூபில் வெளியிடப்பட்ட 2 நாட்களுக்குள் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் அறிமுகமாகும் படம் ‘தி லெஜண்ட்’ . இந்தப் படத்தை லெஜண்ட் சரவணனே தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா, விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைத்து துவங்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி, இமயமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் உக்ரைனில் படமாக்கப்பட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடலான ‘மொசலோ மொசலு’ என்கிற பாடல் யூ-டியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பா.விஜய் இந்தப் பாடலை எழுதியிருந்தார். லெஜண்ட் என்ற பெயருக்கு ஏற்றார்போல், தமிழ், தெலுங்கின் லெஜெண்ட் இயக்குநர்களாகப் பார்க்கப்படும் மணிரத்னம், ராஜமெளலி, சுகுமார் ஆகியோரை வைத்து இந்தப் பாடலை வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தார் லெஜண்ட் சரவணன்.
மேலும், சிநேகன் பாடல் வரிகளில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கிராமத்துப் பின்னணியில், பிரம்மாண்டமான காட்சிகளுடன் வெளியான ‘ஆண்டவனே வந்து ஆடப் போறான் வாடி வாசல்’ பாடலும் கொண்டாட்டமாக அமைந்தது. இதன்பின்னர், முன்னணி நடிகைகள் பங்குபெற்ற இசை மற்றும் ட்ரெயிலர் வெளியிட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், திங் மியூசிக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் 2 நாட்களுக்குள் 10 மில்லியன் அதாவது ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.