சென்னை பெரம்பூர் பாரதி ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (40). இவர் கடந்த 29-ம் தேதி இரவு 8 மணியளவில் கதவை பூட்டி விட்டு வீட்டின் அருகில் உள்ள சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்ய சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் வீட்டுக்குள் நின்றுக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், சத்தம் போட்டார். உடனடியாக வீட்டிலிருந்த இரண்டு பேரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை ராஜ்குமார் பிடிக்க முயன்றபோது இருவரும் அவரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பீரோ திறந்து கிடந்ததால் அதில் வைத்திருந்த நகை பணத்தை ராஜ்குமார் சரிபார்த்தார். அப்போது அதிலிருந்த 19 சவரன் தங்க நகைகள் கொள்ளைப் போயிருந்தன. உடனடியாக ராஜ்குமார், செம்பியம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ராஜ்குமார் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது வியாசர்பாடியைச் சேர்ந்த வடிவேல்பாண்டியன் (31), சாகுல் அமீது எனத் தெரியவந்தது. அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி கொள்ளைப் போன நகைகளை மீட்டனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான வடிவேல் பாண்டியன் மீது மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன.
கொள்ளை நடந்த 12 மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடித்ததோடு நகைகளையும் மீட்ட செம்பியம் போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.