விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள அய்யந்தோப்பு பகுதியில் இயங்கி வருகிறது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இருபாலர் மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்காக செஞ்சி பணிமனையிலிருந்து சிறப்பு அரசு பேருந்துகள் கல்லூரி நாள்களில் இயக்கப்படுகின்றன. அதில், மாணவிகள், பெண்கள் செல்லும் வகையில் ஒரு அரசுப் பேருந்தும் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் மட்டும், பெரும்பாலும் கல்லூரி மாணவிகளே பயணிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவிகள் செல்லும் அந்த அரசுப் பேருந்தை, வடவானூர் பகுதியில் கல்லூரி இளைஞர்கள் சிலர் வழிமறித்து ஏறுவதற்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. “இது பெண்கள் மட்டும் செல்வதற்காக இயக்கப்பட்டும் பேருந்து. இதில் ஏறக்கூடாது” என்று பேருந்து ஊழியர் கூற, மாணவர் ஒருவரோ… “அந்த பஸ்ஸூ கூட்டமாக இருக்கிறதால, இதுல வரேன். ரெண்டு பஸ் விட சொல்லுங்க… போன் பண்ணி கேட்டாச்சு, ஒரு பஸ்ஸூ தான் இன்னிக்கி வருது. நான் எத்தன வாட்டி இந்த பஸ்ல போயிருக்கேன் தெரியுமா… வீடியோ எடுத்து இப்ப என்ன பண்ண போற…” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ குறித்து, செஞ்சி பணிமனையை சேர்ந்த சில அதிகாரிகளிடம் கேட்டோம். “இந்தச் சம்பவம் சுமார் 10 நாள்களுக்கு முன்பாக நடந்துள்ளது. தற்போதுதான் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, பேசு பொருளாகியுள்ளது. திண்டிவனம் அரசு கல்லூரிக்கு… செஞ்சி பகுதியிலிருந்து அதிக மாணவர்கள் செல்வதினால், கல்லூரி நாள்களில் தினமும் 3 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்போது கூட்டம் அதிகமாக இருந்தால், கூடுதலாக ஒரு பேருந்தும் இயக்கப்படும். காலை 8.00, 8.15-க்கு இரு பொது அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 8.10 மணிக்கு, பெண்கள் செல்வதற்காக ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து, வடவானூர் எனும் பகுதியை கடந்து செல்லும் போது, மாணவர்கள் சிலர் பைக் மூலம் பேருந்தை முந்திவந்து வழிமறித்து ஏறுவதற்கு முற்பட்டுள்ளனர். இதை தொடர்ச்சியாகவே செய்து வந்துள்ளனர். பெண்களுக்காக இயக்கப்படும் பேருந்து என்பதால், பேருந்து ஓட்டுநர் ஒருநாள் இதை கேட்டுள்ளார். அந்த வீடியோதான் தற்போது வெளியாகி இருக்கிறது. மாணவர்கள் என்பதால், இது குறித்த புகார் எதுவும் காவல்துறையிடம் தரப்படவில்லை.” என்றனர்.