சேலம்: ”சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் பலர் குவாரி அதிபர்களை மிரட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரசர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி கூறியது: ”திருநெல்வேலி கல்குவாரி விபத்து என்பது பேரிடர் சம்பவம். இச்சம்பவத்துக்கு தொழிலாளர்களோ, குவாரி உரிமையாளர்களோ காரணம் அல்ல. அப்பகுதியில் அதிக அளவிலான மழை பெய்த காரணத்தால், மழைநீர் பாறை இடுக்குகளில் புகுந்து பாறைகள் சரிந்து விழுவதற்கு காரணமாக இருந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்தில் பலர் குவாரி அதிபர்களை மிரட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனப்பகுதியில் இருந்து 7.5 மீட்டர் இடைவெளியில் கல்குவாரிகள் அமைக்க ஏற்கெனவே அனுமதி இருந்த நிலையில், தற்போது வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் கல்குவாரி அமைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை ரத்து செய்து பழையபடியே கல்குவாரிகள் அமைக்க அனுமதிக்க வேண்டும்.
கல் குவாரி உரிமம் வழங்குவதற்கு பல்வேறு துறைகளை அணுகவேண்டி இருப்பதால் 2 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த முறையை எளிமையாக்க வேண்டும். ஐந்து ஹெக்டேருக்கு கல்குவாரிகள் அமைய இருந்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்து கேட்ட பின்னரே, உரிமம் வழங்கப்படும் என்ற முறையை மாற்றி, 25 ஹெக்டேர் என்ற அளவுக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும், பொதுமக்கள் கருத்து கேட்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.