டெல்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 86,912 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு கடந்த 26ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையிலேயே ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவிக்க வலியுறுத்தினார். இந்நிலையில் மாநில அரசுகளுக்கு நிலுவையில் உள்ள 86,912 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை ஒன்றிய அரசு திடீரென விடுத்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி, ஆந்திரப்பிரதேசத்துக்கு ரூ.3,199 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.14,145 கோடி, உத்தரப்பிரதேசத்துக்கு 8,874 கோடி, டெல்லிக்கு 8,012 கோடி, குஜராத்துக்கு 3,364 கோடி, கர்நாடகாவுக்கு 8,633 கோடி, கேரளாவுக்கு 5,693 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வரையிலான நிலுவை தொகை விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.