லண்டன்:
நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனில், இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் டைடன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
பலம் வாய்ந்த அணிகளாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் லீக் சுற்றிலேயே மோசமான புள்ளிகள் எடுத்து வெளியேறின.
குஜராத் டைடன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஹர்த்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். கேப்டன்ஷிப்பை தவிர்த்து, ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் 487 ரன்களையும், 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு புதிய கேப்டன் தேவைப்பட்டால் ஹர்த்திக் பாண்டியா இருக்கிறார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் டுவீட் செய்துள்ளார். ஏற்கனவே வீரேந்திர சேவாக், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், கேரி கிறிஸ்டன் உள்ளிட்டோரும் ஹர்த்திக் பாண்டியாவை பாராட்டி இருந்தனர்.
தற்போது விராட் கோலி கேப்டன் பதவியில் விலகியதை தொடர்ந்து ரோகித் சர்மா, இந்திய அணியின் அனைத்து வகை ஃபார்மெட்டுகளுக்கும் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருவேளை தேவை எழுந்தால், ரோகித்துக்கு பின் ஹர்த்திக் பாண்டியாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.