டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன்- 9 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்யப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரை ஜூன் 9-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலது கரமாக செயல்படுவர் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். கடந்த சில மாதங்களாக சத்யேந்தர் ஜெயின் தொடர்பான சர்ச்சைகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இதனால் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கப் பிரிவு கைது செய்யும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன்னே பொதுவெளியில் கூறியிருந்தார். அப்போது சத்யேந்தர் ஜெயின் வீட்டில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்துக்கு சொந்தமான ரூ4.81கோடி மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கப் பிரிவினர் கைது செய்யக் கூடும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார். 2015-16-ம் ஆண்டு அரசு ஊழியராக சத்யேந்தர் ஜெயின் பணியாற்றிய போது ஹவாலா நெட்வொர்க் மூலம் போலி கம்பெனிகளின் பெயரில் சட்டவிரோதமாக பணம் பெற்றார் என்ற வழக்கின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, இன்று சத்யேந்தர் ஜெயின் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் அமலாக்கத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களானது, அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்பதும், விசாரணைக்கு அழைத்தபோது மழுப்பலான பதில் அளித்ததால் அவர் கைது செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது என்ற வாதத்தையும் முன்வைத்தார். இதனால் நீதிபதி கீதாஞ்சலி கோயல் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை ஜூன் 9-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.