ராமேஸ்வரத்தில் கடந்த 24-ம் தேதி கடலுக்குப் பாசி எடுக்கச் சென்ற மீனவப் பெண் ஒருவர், இறால் பண்ணைக்கு வேலைக்கு வந்த வடமாநில வாலிபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் சம்பவம் நடந்து ஆறு நாள்கள் கடந்தும் இதுவரை பாதிக்கப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணமோ அல்லது அனுதாபமோ தெரிவிக்கவில்லை எனக் கூறி, ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு சார்பிலும், ராமேஸ்வரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக பெண்கள் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சூர்யா நம்மிடம் பேசும்போது, “ராமேஸ்வரம் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏழை மீனவப் பெண், வடமாநில வாலிபர்களால் மனிதாபிமானமற்ற முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே வடமாநிலத்தவர்கள் இவ்வளவு தைரியமாக மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடக் காரணம். அவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகக் களை எடுக்க வேண்டும்.
விருதுநகரில் பட்டியல் இனப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசு, மீனவப் பெண் கொடூரமான முறையில் வடமாநிலத்தவர்களால் கொல்லப்பட்டதற்கு ஓர் அனுதாப அறிவிப்புக்கூட வெளியிடவில்லை.
இறந்தது சாதாரண மீனவப் பெண் என்பதால் அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. மீனவப் பெண் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மௌனம் காப்பது எதற்காக எனப் புரியவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும், அரசு விரைந்து இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.