திண்டுக்கல் அருகே அரசியல் கட்சி சார்பாக கருத்துக்களை முகநூலில் பதிவிட்டு வந்த காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், அம்பத்தூரை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர், தனது முகநூல் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
காவல்துறையில் பணியாற்றும் நபர் நடுநிலையோடு இயங்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளின் அடிப்படையில், காவலர் சுரேஷை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், முகநூல் பதிவுகள் குறித்து சுரேஷிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாகவும், அவரின் முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்து வந்த ஏழு நபரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.