பிரசல்ஸ் : உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிப்பது என, ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் மூன்று மாதங்களை தாண்டியுள்ளது.இப்போரை கண்டித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அடுத்து ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கவும் ஐரோப்பிய கூட்டமைப்பு திட்டமிட்டது.ஆனால், ஐரோப்பிய நாடுகள் எரிபொருளுக்கு ரஷ்யாவை பெரிதும் சார்ந்துள்ளதால், அதன் இறக்குமதிக்கு தடை விதிப்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.அதில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியில், அடுத்த ஆறு மாதங்களுக்கு, 90 சதவீத அளவிற்கு தடை விதிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள், 25 சதவீத கச்சா எண்ணெய்; 40 சதவீத இயற்கை எரிவாயுவை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன.
இதற்கிடையே ஐரோப்பிய நாடான ஹங்கேரி, போதிய அளவு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சப்ளைக்கு உறுதி அளித்தால் மட்டுமே ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதி மீதான தடையை ஆதரிக்க முடியும் என, தெரிவித்துள்ளது.ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து கவலைப்படாத ரஷ்யா, எரிபொருளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.ரஷ்யா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளான போலந்து, பின்லாந்து, பல்கேரியா ஆகியவற்றுக்கு எரிவாயு சப்ளையை நிறுத்தி விட்டது. அடுத்து நெதர்லாந்து, டென்மார்க் நாடுகளுக்கும் எரிவாயு சப்ளையை நிறுத்துவது குறித்து ஆலோசிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Advertisement