தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் பல நூறு பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகர் கே.கே மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்தவர், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திடீரென்று சுருண்டு விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்ற நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பு உறுதி செய்துள்ளது.
53 வயதான பாடகர் கே.கே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.
கேரளத்து தம்பதிக்கு மகனாக பிறந்த கே.கே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் தமிழில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்லூரி சாலை என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.
தமிழில், காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே, அந்நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தின் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் பாடிய பல பாடல்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் வெளிவரவுள்ள லெஜண்ட் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.