பிரபல பாடகர் கேகே மாரடைப்பால் காலமானார்; தனித்துவ குரலால் தமிழிலும் வசீகரித்தவர்

கொல்கத்தா: பிரபல பின்னணி இசை பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (கேகே) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கலை தெரிவித்துள்ளார். அவருக்கு வயது 53.

பிரபல பாடகரான கேகே, தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் பாடியுள்ளார். கடந்த 1968-இல் தலைநகர் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3500-க்கும் மேற்பட்ட ஜிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடியிருந்தார் கேகே. 1996 முதல் திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தான் முதன் முதலில் அவர் திரையில் பாடியுள்ளதாக தெரிகிறது.

தமிழ் திரைப்படங்களில் சுமார் 66 பாடல்களை அவர் பாடியுள்ளார். காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க), ஸ்ட்ராபெர்ரி கண்ணே (மின்சார கனவு) உள்ளிட்ட பாடல்கள் இதில் அடங்கும்.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் கேகே. அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு செய்தியை அறிந்து ரசிகர்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.