சண்டிகர்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் உடல் அவரது பூர்வீக கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா (28), கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மான்சா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு காரில் சென்றார். அப்போது மர்ம நபர்கள் காரை வழிமறித்து துப்பாக்கியால் சரிமாரியாக சுட்டதில் சித்து மூஸ் வாலா உயிரிழந்தார்.
பஞ்சாபில் மூஸ் வாலா உள்ளிட்ட 424 விஐபி.களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்தும் அல்லது வாபஸ் பெற்றும் ஆம் ஆத்மி அரசு நடவடிக்கை மேற்கொண்ட மறுநாள் இந்தப் படுகொலை நடந்தது. இது அவரது ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இரு கும்பலுக்கு இடையிலான மோதலில் மூஸ் வாலா இறந்ததாக பஞ்சாப் போலீஸார் கூறியதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிக்க அவரது குடும்பத்தினர் மறுத்தனர்.
இதையடுத்து மூஸ் வாலா மீதுமிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவரை குண்டர் என தான் ஒருபோதும் கூறவில்லை எனவும் பஞ்சாப் டிஜிபி வி.கே.பவ்ரா விளக்கம் அளித்தார்.
மூஸ் வாலாவின் உடலில் மொத்தம் 25 குண்டு காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மூஸ் வாலாவின் உடல், மான்சா மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமமான மூசாவில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து மூஸாவுக்கு பிடித்தமான டிராக்டரில் அவரது உடல் ஊர்வலமாக பூர்வீக விவசாய நிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜா வாரிங் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்து மூஸ் வாலா போட்டியிட்டார். ஆனால் ஆம் ஆத்மி வேட்பாளர் விஜய் சிங்லாவிடம் அவர் தோல்வி அடைந்தார்.