கொச்சி: கேரளாவில், பெற்றோர்களால் பிரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களான இரு பெண்களை அம்மாநில உயர் நீதிமன்றம் நேற்று இணைத்து வைத்தது.
கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த இரு பெண்கள், பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது தோழிகள் ஆகினர். ஒருகட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தது. இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கோழிக்கோட்டை சேர்ந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தன் தோழியுடன் எர்ணாகுளத்தில் வந்து தங்கினார்.
இந்நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை.இதையடுத்து, எர்ணாகுளத்தை சேர்ந்த பெண் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோழிக்கோட்டை சேர்ந்த பெண்ணை அவரது பெற்றோர் ஆஜர்படுத்தினர்.தன் தோழியுடன் இணைந்து வாழ்வதையே விரும்புவதாக அந்த பெண் தெரிவித்தார். இருவரும் 18 வயதை கடந்தவர்கள் என்ற காரணத்தினால், இருவரையும் சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதித்தது.
Advertisement