பெற்றோரால் பிரிக்கப்பட்ட தன் பாலின ஈர்ப்பாள தம்பதியர் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா ஆகியோர் சவூதி அரேபியாவில் மாணவிகளாக இருந்தபோது சந்தித்தனர். இருவரும் காதலிக்கத் துவங்கிய பின்னர் பட்டப்படிப்பு முடித்ததும் இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். ஆனால் இந்த உறவுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆறு நாட்களுக்கு முன்பு, ஆதிலாவுடன் ஒரே வீட்டில் தங்குவதற்காக பாத்திமாவை அவரது உறவினர்கள் சண்டை போட்டு தங்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது துணைவியாருக்காக கேரள உயர்நீதிமன்றத்தை நாடினார் ஆதிலா நஸ்ரின்.
தனது துணைவியார் பாத்திமா கடத்தப்பட்டு இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டு “ஹேபியஸ் கார்பஸ்” எனும் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் ஆதிலா நஸ்ரின். தானும் தனது துணைவியார் பாத்திமா நூராவும் அவர்களது குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக ஆதிலா நஸ்ரின் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற கேரள உயர்நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் மனுதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாத்திமா நூரா மற்றும் ஆதிலா நஸ்ரின் இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தடை இல்லை என அறிவித்து ஹேபியஸ் கார்பஸ் மனுவை முடித்து வைத்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM