புதுடெல்லி: வாரணாசி மாவட்ட நீதிமன்ற தடையை மீறி, கியான்வாபி மசூதி கள ஆய்வறிக்கை ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தங்களுக்கு எதிரான சதி என இந்து தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் சிங்கார கவுரி அம்மன் தரிசன வழக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ல்தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த வாரணாசி சிவில் நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர் உத்தரவிட்டார்.
இதில் இந்து கோயில் இருந்ததற்கான பல சிற்பங்கள், முத்திரைகள் மற்றும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக அறிக்கை தாக்கலானது. இதனால், சிவலிங்கம் இருந்த ஒசுகானா பகுதி, வாரணாசி சிவில் நீதிமன்றத்தால் ‘சீல்’ வைக்கப்பட்டது.
முன்னதாக கள ஆய்வுக்கு தடை கோரி கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 அடிப்படையில் தடை கோரப்பட்டது. இதற்கான மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மே 20-ம்தேதி, வாரணாசி மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதன்படி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ் வழக்கை விசாரித்தார். அவரது முன், மே 23 முதல் 30 வரை மசூதி நிர்வாகம் தனது வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து இந்த வழக்கை கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 4-ம் தேதி விசாரிப்பதாக மாவட்ட நீதிபதி அறிவித்தார்.
இதனிடையே மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் இந்துக்கள் தரப்பிடம் கள ஆய்வறிக்கையின் நகல், புகைப்படம் மற்றும் வீடியோக்களுடன் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு முன் ஆய்வறிக்கையை வேறு எவருக்கும் காட்ட மாட்டோம் என இரு தரப்பிலும் உறுதிமொழி கோரப்பட்டது.
ஆனால் மசூதி நிர்வாகத்தினர் இதுவரை உறுதிமொழி அளிக்காததால் அவர்களிடம் ஆய்வறிக்கையின் நகல் தரப்படவில்லை. இந்நிலையில் இந்துக்களிடம் தரப்பட்ட ஆய்வறிக்கை சில நிமிடங்களில் கசிந்தது.
இதை ரூ.3 லட்சம் கொடுத்துப் பெற்றதாக ஓர் இந்தி ஊடகம் தெரிவித்தது. இத்துடன் சமூக வலைதளங்களிலும் கள ஆய்வறிக்கை வைரலானது. இதன் விசாரணைக்கு மாவட்ட நீதிமன்றம் நேற்று கூடியது.
இதுகுறித்து இந்து தரப்பின் வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் கூறும்போது, “எங்களிடம் அளிக்கப்பட்ட அறிக்கை நகலின் ‘சீல்’ இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கு முன்பாக அறிக்கை கசிந்தது இந்துக்களுக்கு எதிரான சதியாகும். எனவே இதன் மீது சிபிஐ விசாரணை கோரி, எங்களது சீல் பிரிக்காத அறிக்கையின் 4 உறைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தோம். ஆனால் இதனை பெற்றுக்கொள்ள நீதிமன்றம் மறுத்துவிட்டது” என்றார்.
விசாரணை வேண்டும்
மசூதி நிர்வாகத்தின் வழக்கறிஞர் அபய் நாத் யாதவ் கூறும்போது, “நீதிமன்றத் தடையை மீறி அறிக்கை கசிய வைக்கப்பட்டுள்ளது. தவறான தகவலை பரப்பி பொதுமக்கள் இடையே அமைதியை சீர்குலைப்பதே இதன் நோக்கம். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் கோரியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.
காசி விஸ்வநாதர் கோயிலானது முகலாயர் ஆட்சியில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. அதன் ஒரு பகுதியில் அமைந்தது தான் கியான்வாபி என இந்துக்கள் தரப்பில் ஏற்கெனவே தொடுக்கப்பட்ட வழக்குகள், வாரணாசி நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.