அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 5

அழகிய பெரியவன்

பெயரில் என்ன இருக்கிறது?

நாடு நவீனமாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஒரு பெயர் இந்திய மக்களின் மனசாட்சியை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் விசையூக்கம் கொண்டதாக அறியப்படுகிறது. இந்தியாவில் வைக்கப்படும் எல்லா பெயர்களையும் போல அதுவும் ஒரு பெயர்தான் என கடந்துச் சென்றுவிட முடியாதபடிக்கு இந்திய மக்கள் ஆளுக்கொரு அர்த்தத்தை அதிலிருந்து புரிந்துகொள்கிறார்கள். அல்லது ஆளுக்கொரு அர்த்தத்தை அதற்கு வழங்குகிறார்கள்.

அப்பெயரை வழிபடுகிறார்கள். அல்லது வெறுக்கிறார்கள். மூளையில் ஆழமாகச் சென்று மாயங்களை நிகழ்த்திவிடும் என்பதால் அப்பெயரைக் கொஞ்சுகிறார்கள் அல்லது அஞ்சுகிறார்கள். அதனுடன் பிணைத்துக் கொள்கிறார்கள் அல்லது அதனிடமிருந்து விலகி ஓடுகிறார்கள். அதில் தெளிவடைகிறார்கள் அல்லது அதை முன்வைத்துக் குழம்புகிறார்கள்.

எல்லா இந்திய மனங்களிலும் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ அப்பெயர் பதிந்திருக்கிறது. தொடர்ந்து மக்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இன்னும் கூடக் கொஞ்சம் ஆழமாகச் சென்று சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் சட்டத்துக் குட்படாத சட்டமாகப் பின்பற்றப்படுவரும் மனுஷ்மிருதி சொல்வதற்கேற்ப சூட்டப்படாத பெயராகிய அது இன்னமும் தனக்குரிய முழுமதிப்பைப் பெற்றுக் கொள்ளவேயில்லை. அந்தப் பெயர் அம்பேத்கர்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அம்பேத்கர்

இந்திய சாதியச் சமூகத்தில் மிகவும் கீழ்நிலையில் பிறந்திடும் ஒருவரின் பாதையில் ஏற்படுத்தப்படுகின்ற எல்லாவிதமான தடைகளையும், சுமத்தப்படுகின்ற எல்லாவிதமான ஒடுக்குமுறைகளையும் ஆக்கப்பூர்வமான முறையில் உடைத்தெறிந்தவர் அம்பேத்கர். சமூகப்புரட்சியாளராக, சாதனையாளராக, உதாரணமனிதராக போற்றப்பட வேண்டியவர். ஆனால் அம்பேத்கர் அவ்விதம் இங்கு போற்றப் படுவதில்லை.

நவீன இந்தியாவின் தலைவர்களில் எத்தனையோ பேர் மறக்கப்பட்டிருக்கிறார்கள். எந்தவிதமான உணர்வுமின்றி ஏதோ ஒன்றைக் கடப்பதைப் போல காலம் தன் பயணத்தில் அவர்களில் பலரைக் கடந்து வந்துவிட்டிருக்கிறது. அப்படிக் கைவிடப்பட்ட பல தலைவர்களைப் போலவும் அவர் கைவிடப்பட்டவர் அல்லர். இந்த நூற்றாண்டிலும் அவர் காலத்தோடு இயைந்து தொடர்ந்து வருகிறார்.

ஆனால் அவரின் இந்தத் தொடர்பயணம் குறுகிய பார்வையுடைய சாதியின் பேரால் அவமானப் படுத்தப்படுகிறது. அவர் சர்ச்சைக்குள்ளாக்கப் படுகிறார். தான் வாழ்ந்த காலத்திலிருந்தே இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொண்டு வந்தவரான அம்பேத்கர், தனது இறப்புக்குப் பிறகும் அவற்றை எதிர்கொள்கிறார். இந்துக்கள் தங்களின் மூதாதையரின் இறப்புக்குப்பின் பிண்டம் வைப்பதைப் போல் அவருக்கு வெறுப்பை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

கோனசீமா கலவரம்

அம்பேத்கரின் பெயரை ஒரு மாவட்டத்துக்குச் சூட்டியதற்காக ஆந்திர மாநிலம் அண்மையில் கலவரங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆந்திராவின் கேரளம் என்று அறியப்படும் செழிப்புமிக்க கோதாவரி ஆற்றுப்படுகை மாவட்டம் கோனசீமா. சுற்றுலாவுக்குப் பெயர்ப்போன அளவுக்கு சாதிய கலவரங்களுக்கும் பெயர்ப்போனது என்று சொல்கிறார்கள். பிரகாசம் மாவட்டம் கரம்சேடு, குண்டூர் மாவட்டம் சுண்டூர் சாதியக் கலவரங்களுக்கு இணையாக தற்போது கோனசீமாவும் அறியப்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஜெகன்மோகன் அரசு, புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்கியது. ராமச்சந்திராபுரம், அமலாபுரம் என்ற இரண்டு வருவாய்க் கோட்டங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டம் ஒன்று கோனசீமாவிலிருந்தும் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டவேண்டும் என்று தலித் அமைப்புகள் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர்ச்சூட்டி மே-18 அன்று ஆணை வெளியிட்டது.

இந்த அறிவிப்பை முதலில் வரவேற்ற மக்கள் இப்பெயரை நீக்கக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். வன்முறையாக மாறிய இப்போராட்டத்தில் மும்முடிவாரம் சட்டமன்ற உறுப்பினர் பி.சதிஸ் வீடும், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் விஷ்வரூப் முகாம் அலுவலகமும் சூறையாடப்பட்டு கொளுத்தப் பட்டிருக்கின்றன. பேருந்துகள் தீக்கிரையாகியுள்ளன. வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை பிறப்பித்திருக்கிறது.

வாட்ஸ்-ஆப் மற்றும் முகநூல் செய்திப்பரவல் மூலமாக கலவரங்கள் தீவிரமடைந்ததாக இணையப் பக்கங்கள் சொல்கின்றன. கோனசீமா மாவட்டத்தில் ஒருவர், அம்பேத்கர் பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வாட்ஸாப்பில் பதிவுகளைப் போட்டதாகவும், உடனே சிலர் வீட்டுக்குள் நுழைந்து அவரை அழைத்துச் சென்று அம்பேத்கர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யச்சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும் ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். எதிர்ப்பாளர்கள் திரள்வதற்கு இதைப்போன்ற ஆதாரமற்ற செய்திகளே காரணம் என்று கூறப்படுகிறது.

கோனசீமாவில் மட்டும் தான் அம்பேத்கரின் பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதா என்றால் இல்லை. இது இந்தியாவில் நீண்டகாலமாக நடந்துவருகிறது. அவர் பிறந்த மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அவருடைய பெயரை வைத்தபோதும் கலவரங்கள் வெடித்தன.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

மராத்வாடா பல்கலை பெயர்மாற்றம்

மராத்வாடா பல்கலைக் கழகத்தை டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைகழகம் என பெயர் மாற்றம் செய்யும்படி நீண்டநாளாய் கோரிக்கை இருந்தது. 1978 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிர முதல்வர் வசந்த்பாட்டில் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் பேசி ஆணையொன்றைப் பிறப்பித்தார். இதையடுத்து மராத்வாடா பல்கலைக்கழக செனட், பெயர்மாற்றத் தீர்மானத்தை இயற்றியதும் கலவரங்கள் வெடித்தன.

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், பிரபாணி, நன்தத், பீத், உஸ்மானாபாத், ஹிங்கோலி, ஆகிய மாவட்டங்களில் அதிகளவுக்கு தலித் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. மராத்வாடா பகுதியிலிருந்த தலித் மக்கள் உயிருக்கு அஞ்சி காடுகளுக்கு ஓடினர். வீடுகள் கொளுத்தப்பட்டன. தலித் குடியிருப்புகள் சூறையாடப்பட்டன. நீர்நிலைகள் அசுத்தப்படுத்தப்பட்டு நஞ்சு கலக்கப்பட்டன.

கலவரக்காரர்கள் அதோடு நிற்காமல் கால்நடைகளை அழித்தனர். தலித் மக்களுக்கு வேலைதர மறுத்து, ஊரை காலிசெய்ய வலியுறுத்தினர். பாலங்கள், சாலைகள், மருத்துவ மனைகள், ரயில் நிலையங்கள், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என எல்லாமே தாக்குதலுக்கு உள்ளாகி சேதப்படுத்தப்பட்டன. தலித்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.பத்தொன்பது பேர் இறந்ததாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனால் இது அதிகமாக இருக்கலாம்.

இதைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட ’நாமந்தார் அந்தோலன்’ என்கிற இயக்கம் மராத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கரின் பெயரை சூட்டும் நீண்ட போராட்டங்களை நடத்தியது. இந்த இயக்கம் 1994ம் ஆண்டு சனவரி மாதம் முடிவுக்கு வந்தது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

2017ல் கர்நாடக மாநிலம் பிஜபூர் மாவட்டம் பசவண்ணா பாகேவதி தாலுக்காவிலுள்ள மத்யாலி கிராமத்து நுழைவு வாயிலுக்கு டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் நுழைவு வாயில் என்று பெயரைச் சூட்டியதும் அங்கிருந்த சாதி இந்துக்கள் எதிர்த்தனர். பசவேஸ்வரா நுழைவாயில் என்று அந்தப் பெயரை மாற்றம் செய்ய வலியுறுத்தி அந்த ஊரிலிருந்த தலித் மக்களை சமூக விலக்கம் செய்தனர். தலித் மக்களுக்கு அங்கிருக்கும் கடைகளில் பொருட்களோ, குடி தண்ணீரோ, நிலத்தில் வேலைகளோ வழங்கப்படவில்லை. இந்த நிலை மாதக்கணக்கில் நீடித்தது.

2021, ஏப்ரலில் பெங்களூர் பல்கலைக்கழக நூலக கட்டடத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்கப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெயர் வைப்பதற்கு எதிர்க்கவில்ல. ஆனால் அது சிண்டிகேட் கூட்டத்தில் வைத்து விவாதிக்கப்படாமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வைக்கப்பட்டது. அதனாலேயே எதிர்க்கிறோம் என்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இதே கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு குடியரசுதின விழாவில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்தை அகற்றிவிட்டே ரெய்ச்சூர் மாவட்ட முதன்மை நீதிபதி கொடியேற்றினார்.

சுந்தரலிங்கம் போக்குவரத்துக்கழகம்

அம்பேத்கர் பெயர்மாற்ற செயற்பாட்டில் தமிழகம் மிகவும் முற்போக்காக நடந்துகொள்கிற மாநிலம் என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. 1997-ஏப்ரல் மாதம் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கும், 21 போக்குவரத்துக் கழகங்களுக்கும் பெயர் மாற்றங்களைச் செய்தார்.

திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவர், வீரன் சுந்தரலிங்கம், ஈ. வெ. ராமசாமி பெரியார், பி. ஆர். அம்பேத்கர், வா. உ. சிதம்பரம், சி. இராஜகோபாலாச்சாரி, கே. காமராஜ், நேசமணி, பசும்பொன் முத்துராமலிங்கனார், சி. என். அண்ணாத்துரை, எம். ஜி. இராமச்சந்திரன், இராஜீவ் காந்தி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டன.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

கட்டபொம்மனின் படையில் தளபதியாக விளங்கிய அடித்தட்டு மக்கள் திரளைச் சேர்ந்த வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் ஒருபோக்குவரத்துக் கழகத்துக்கு சூட்டப்பட்டதை ஏற்காத தென்தமிழக இடைச்சாதியினர் கலவரங்களில் இறங்கினர். பேருந்துகள் எரிப்பு, கல்வீச்சு, சூறையாடல், தீவைப்பு, துப்பாக்கிச்சூடு என நீண்ட இக்கலவரங்களில் சுமார் 40 பேர் இறந்தனர். பின்னர் இந்த அறிவிப்பை கைவிட்டு, 15 தமிழக பல்கலைக் கழகங்களில் இத்தலைவர்களின் பெயர்களில் ஆய்வு இருக்கைக்கைகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப் படுவதை நாடே பார்த்தது. தமிழகம் முழுவதிலுமுள்ள அம்பேத்கர் சிலைகள் இரும்புக் கூண்டுகளுக்குள்ளே தான் இருக்கின்றன என்பது தமிழர்களின் அறிவு நேர்மைக்கு மிகச்சிறந்த சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னை எழும்பூரில் இருக்கிற ‘எழும்பூர் பள்ளி’ யை, 1992 ஆம் ஆண்டு டாக்டர். அம்பேத்கர் அரசினர் மேல்நிலைப் பள்ளி என பெயர்மாற்றம் செய்தது அன்றைய அரசு. அப்பள்ளி பெயர்மாற்றத்தோடு இடமாற்றத்துக்கும் உள்ளாக்கப் பட்டது. சுமார் ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த அப்பள்ளியில் தற்போது சுமார் 70 மாணவர்களே படிக்கின்றனர். தலித் பெண் சமைத்த சத்துணவை சாப்பிடுவதற்கு எங்களுடைய பிள்ளைகளை அனுப்பமாட்டோம் என்று ’போராட்டம்’ நடத்திய கொங்கு மக்களைப்போல, அம்பேத்கரின் பெயரை வைத்ததால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று சென்னை மக்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். முன்னது வெளிப்படையானது. பின்னதோ கமுக்கமானது.

இன்னமும் கூட பல அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் அம்பேத்கரின் புகைப்படத்தை வைக்க முடியவில்லை என்ற செய்திகள் வந்துகொண்டுதான் உள்ளன. பெரும்பாலான இவ்வகை செய்திகள் வெளிவருவதில்லை. அம்பேத்கரின் பேசும் எழுத்தும் அடங்கிய நூல்தொகுதிகள் ஒன்றிய அரசால் வெளியிடப்படாமல் முடக்கப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி 1992ல் ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்ட அம்பேத்கர் விருது இதுவரைக்கும் ஏழு முறை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. 1995ல் நிறுவப்பட்ட அம்பேத்கர் சர்வதேச விருது இதுவரை இரண்டே இரண்டு முறை மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. நிர்வாகக் காரணங்களுக்காக வழங்கவில்லை என்று சொல்லியே இந்த விருதுகளை வழங்காமல் தவிர்த்துவருகிறார்கள். அம்பேத்கர் விருதுத் தொகை பத்து இலட்சம். அம்பேத்கர் சர்வதேச விருதுத் தொகை பதினைந்து இலட்சம். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பச்சொல்லி வெளியிடும் விளம்பரத்துக்கான தொகை மட்டும் ஐம்பது இலட்சம்!

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

பெயரா சிக்கல்?

அம்பேத்கரின் மேதமையைக் குறித்தோ, நாட்டுக்கு அவர் செய்த பங்களிப்பைக் குறித்தோ இங்கு விரிவாக விளக்கத் தேவையில்லை. ஆனால் பலபேரை கொன்றொழித்த, சட்டத்துக்கும் வெகுமக்களுக்கும் எதிராக சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட சிலரின் படங்களைக்கூட தங்களின் அடையாளமாக பெருமையுடன் முன்னிருத்த விரும்பிடும் நம்சமூகம் ஏன் அம்பேத்கரின் பெயரை வெறுக்கிறது?

ஒட்டுமொத்த தேசமே அம்பேத்கரை வெறுப்பதாகச் சொல்வதோ, சித்தரிப்பதோ இந்தக் கேள்வியின் நோக்கமல்ல. அவருடைய பெயர் தொடர்ந்து பல இடங்களுக்கும், பல நிறுவனங்களுக்கும் சூட்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அவற்றுக்கு இணையாக எதிர்ப்புகளும் எழுந்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த எதிர்ப்புகளை வேறெந்தத் தலைவரும் இந்தியாவில் பெறுவதில்லை.

அம்பேத்கரை முன்வைத்து தலித் அமைப்புகள் செய்யும் அரசியலுக்கு இணையாகவும், அதற்கும் மேலும், பிற அரசியல் அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் அம்பேத்கரை முன்வைத்து செய்கின்ற சந்தர்ப்பவாத அரசியலே இதற்குக் காரணம்.

கோனசீமாவில் பவன்கல்யாண் தலைமையிலான ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தான் நடந்த கலவரத்துக்கு பின்னால் இருந்ததாக செய்திகள் சொல்கின்றன. கோனசீமா பரிரக்‌ஷன கமிட்டி, கோனசீமா சதான சமிதி, கோனசீமா உதயமா சமிதி ஆகிய அமைப்புகளும் பின்னணியில் ஆதிக்கவாதிகள் இருந்துகொண்டு, ஊர்வலங்களை நடத்தி, பழைய பெயரே வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்திருக்கிறார்கள்.

மராத்வாடா கலவரத்தில் சிவசேனா, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகியவை பங்கேற்றதாக தரவுகள் இருக்கின்றன. தமிழகத்தில் சுந்தரலிங்கம் பெயரை எதிர்த்தவர்கள் அப்பட்டமான சாதிய அமைப்புகள். அந்த நேரத்தில் இந்தப் பெயர்வைப்பைக் குறித்து வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அரசியல் அமைப்புகள் மிகவும் குறைவு.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

”டாக்டர் அம்பேத்கர் மாமனிதர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த கோனசீமா மாவட்டத்துக்கு அவர் பெயரைச் சூட்ட வேண்டாம். மரபார்ந்த பெயரே இருக்கட்டும். எங்களுக்கு மட்டும் ஏனிந்தப் பெயர் மாற்றம்? பிற மாவட்டங்களுக்கு ஏனில்லை?”

என்று கலவரக்காரர்களில் ஒருவர் கேட்பதாக செய்திகளில் படிக்க முடிந்தது. முகம் தெரியாத அந்த மனிதரின் இந்த வாக்குமூலத்தில் அம்பேத்கர் குறித்த மரியாதையும், அவரை ஏற்க மறுக்கிற தயக்கமும் ஒருசேர தொனிப்பதைப் பார்க்க முடிகிறது. இது இந்திய சாதியப் பழமைவாதத்துக்கும், இந்திய மக்கள் சனநாயக நவீனவாதத்துக்கும் இடையிலானதொரு ஊசலாட்டம்.

இந்தத் தடுமாற்றத்தையே சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்ற கட்சித் தலைவர்களும், சாதியத்தலைவர்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதோடு இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் அவர்கள் நின்று தங்களின் சாதிய வஞ்சத்தையும் தீர்த்துக் கொள்கின்றனர்.
இந்தியப் பெயர்கள் அனைத்துமே ஒரு புதிரை தனக்குள்ளே கொண்டிருக்கின்றன. மனுஷ்மிருதி பரிந்துரைத்த பெயர்வைப்புமுறை என ஒன்று உண்டு. நான்கு வருணத்தாரும் முறையே அறிவு, அதிகாரம், மகிழ்ச்சி, அடிமைத்தனம் ஆகிய அர்த்தங்களை வெளிப்படுத்துகிற பெயர்களைச் சூட்டிக்கொள்ள வேண்டும் என்று அது சொன்னது.

காலப்போக்கில் பெயர்வைப்பு முறைகள் வெகுவாக மாறிவிட்டன. என்றாலும் எந்தப்பெயரை வைத்துக் கொண்டாலும், வைத்துக் கொண்டிருப்பவரின் சாதிய நிலையைப் பார்த்து அந்தப் பெயரையும் புறக்கணித்துவிடுகிற போக்கு மட்டும் இன்னமும் மாறவில்லை. இதனாலேயே தன்னுடைய பெயரோ, அல்லது தன்னுடைய இருப்பிடமோ, ஒரு தலித்தின் பெயரால் அடையாளப் படுத்தப்படும் போது இந்தியரின் மனநிலையில் பதுங்கிக் கிடக்கும் சாதிய உணர்வு பதற்றத்துக் குள்ளாகி வெளிப்பட்டுவிடுகிறது. இந்தப் பெயர் அடையாளத்தால் தன்னுடைய மேல்நிலையாக்க நிலைக்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என்று அவர்கள் அச்சம் கொண்டு விடுகின்றனர்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அடையாள அரசியல் தேவையில்லை

அம்பேத்கருக்கும், இந்தச் சாதியப்பெயர் அரசியலுக்கும் சிறிதும் தொடர்பில்லை. அவர் தன்னைப் பிணைத்திருந்த பழமைவாத சங்கிலிகளை கூர்மையாகக் கட்டுடைத்து தன் செயல்களால் அதைக் கடந்து விட்டவர். பௌத்தத்தை மீள்கண்டுபிடிப்பு செய்து பின்னர் அதையே அவர் தழுவியும் கொண்டது அச்செயல்களின் உச்சமாகும். அதனாலேயே அவர் தன்னைப்பற்றி வரையறுக்கிறபோது, நான் இந்த நாட்டின் அங்கம் தான். ஆனால் ஒரு தனித்துவமான அங்கம் என்றார். அவருடைய கருத்துகளையும் செயல்களையும் உள்வாங்க மறுக்கிற, அனைத்து வகையான இந்திய அதிகார விரும்பிகளும் அவரை மீண்டும் மீண்டும் ஓர் அடையாளத்துக்குள் இருத்துவதற்கான வேலைகளையே செய்துகொண்டு இருக்கின்றனர். அறிந்தும் அறியாமலும் இது நடந்தபடியே இருக்கிறது.

அவருடைய பெயரைச் சூட்டுவதிலும், அவரின் சிலைகளை நிறுவுவதிலும் இருப்பது ஒர் அடையாளப்பூர்வ செயல்மட்டும் தான். அதற்குமேல் அதில் ஒன்றுமேயில்லை. அது ஒருவகையான அடையாள அரசியலும் கூட. இந்த அடையாளப்பூர்வ செயல்பாடுகளின் தேவை உண்மையிலேயே மிகக்குறைவானது.
மாறாக இங்கு தேவைப்படுவது அவருடைய சிந்தனைகளும் சித்தாந்தங்களும் தான். அவர் விரும்பிய சாதியற்ற சமத்துவ சமூகத்திற்கான கருத்துப் பரவல் இந்தியாவின் அனைத்து மட்டங்களிலும் நிகழ்ந்திடவேண்டும். அப்படி நடந்து விட்டால் எதிர்ப்பவர் கொண்டாடும் முதல் பெயராக அவருடையது இருக்கும்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 4

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.