திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அவர். திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியிருக்கிறார். திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே மாணவி வந்தபோது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றவே ஒருகட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியிருக்கிறார்.
இதில் கழுத்து, தோள்பட்டை, முதுகு என 10 இடங்களில் மாணவிக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி விழுந்த அந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொத்தமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் (22) என்னும் இளைஞர் அழைத்துச் சென்றிருக்கிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க, மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கேசவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கேசவன், தொடர்ச்சியாக அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தியிருக்கிறார். மேலும், `உன்னால தான் ஜெயிக்கு போய்ட்டு வந்துருக்கேன். நீயே என்னை வேணாம்னு எப்படி சொல்லலாம்’ என தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தான், நேற்று மதியம் மாணவியை பின் தொடர்ந்து வந்து ‘என்னை கட்டிக்கலைன்னா ஏன் உயிரோட இருக்க, செத்துப் போ!’ என கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். மாணவியின் உடலில் 10-க்கும் மேற்பட்ட கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனையில் வைத்து தீவிரமாக சிகிச்சை கொடுத்து வருகின்றனர். தலைமறைவான கேசவனை மணப்பாறை போலீஸார் தேடி வருகின்றனர்.