கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தேசியக் கொடியை அவமதித்ததாக, அவரை கைது செய்யவேண்டும் என ஆம் ஆத்மியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டெல்லியிலுள்ள நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஈஸ்வரப்பா மீது புகாரளித்த சஞ்சய் சிங், “ஒரு நாள் காவிக்கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக மாறும் என்று கூறி தேசியக் கொடியை அவமதித்த ஈஸ்வரப்பா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசியக் கொடி ஏற்றப்படவேயில்லை. உண்மையில் பா.ஜ.க, தேசியக் கொடியை எதிர்க்கிறது” என நேற்று கூறியிருந்தார்.
முன்னதாக ஈஸ்வரப்பா, “காவிக்கு மரியாதை என்பது இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக கொடுக்கப்பட்டு வருகிறது. காவிக்கொடியானது தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ்-ன் கொடியானது இன்றில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் தேசியக் கொடியாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை” எனக் கூறியிருந்தார். ஈஸ்வரப்பாவின் இத்தகைய பேச்சுக்குப் பின்னரே, சஞ்சய் சிங் இதுபோன்று புகாரளித்துள்ளார்.
இது முதல் முறையல்ல, முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடக சட்டசபையிலேயே, `செங்கோட்டையில் ஒருநாள் காவிக்கொடி ஏற்றப்படும்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஈஸ்வரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.