புதுடெல்லி,
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 9-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.
அதைத் தொடர்ந்து 2 முதல் 5-வது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன் 12-ந்தேதி), விசாகப்பட்டினம் (14-ந்தேதி), ராஜ்கோட் (17-ந்தேதி), பெங்களூரு (19-ந்தேதி) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கும்.
இதையொட்டி தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாளை ( வியாழக்கிழமை) டெல்லி வந்தடைகிறார்கள். அதே சமயம் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கு 5-ந்தேதி ஒன்றிணைவார்கள் என்று டெல்லி கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் ராஜன் மன்சந்தா தெரிவித்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு மாதங்கள் இந்திய வீரர்கள் தொடர்ந்து விளையாடிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி லோகேஷ் ராகுல் தலைமையில் களம் இறங்குகிறது.
கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் இந்த தொடரில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள். இதே போல் வீரர்களுக்கான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ பபுள்) உருவாக்கப்படாது. ஆனாலும் அவ்வப்போது கொரோனா மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.