பிரபல பின்னணி பாடகர் கே.கே. காலமானார்: பிரதமர் மற்றும் பிரபலங்கள் இரங்கல்
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கல்லூரி விழாவில் பாடிக்கொண்டிருந்த போது பிரபல பாடகர் கே.கே. காலமானார். பிரபல பின்னணி பாடகர் கே.கே.,என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் 53 . டில்லியைச் சேர்ந்த இவர் , தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடி புகழ் பெற்றவர் .
தமிழில் இவரது பாடல்கள் தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் திரைப்படத்தில் “கல்லூரிச் சாலை” மற்றும் “ஹலோ டாக்டர்” பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். 90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் கே.கே! மின்சார கனவு திரைப்படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே', உயிரோடு உயிராக திரைப்படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்', செல்லமே திரைப்படத்தில் 'காதலிக்கும் ஆசையில்லை', காக்க காக்க திரைப்படத்தில் 'உயிரின் உயிரே', 7ஜி ரெயின்போ காலனியில் 'நினைத்து நினைத்து பார்த்தேன்', காவலன் திரைப்படத்தில் 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது', மன்மதன் திரைப்படத்தில் 'காதல் வளர்த்தேன்' உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரின் குரலே உயிர் கொடுத்தது.
|
மெல்லிசை காதல் பாடல் மட்டுமின்றி, ரெட் படத்தில் 'ஒல்லிகுச்சி உடம்புகாரி', எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் 'வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல', அந்நியன் திரைப்படத்தில் 'அண்டங்காக்கா கொண்டக்காரி', கில்லி படத்தில் 'அப்படிப்போடு போடு' என அதிரடியான காதல் பாடல்களும் கே.கே.வின் தனித்த குரலால் மேலும் அழகானது. இப்படியாக 90'S கிட்ஸ்களின் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த கே.கே.-வின் குரல் அதிரடி காதல் பாடல்களையும் தனித்த குரலால் அழகாக்கியவர் கே.கே. விரைவில் வெளிவரவுள்ள லெஜண்ட் திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
இவருக்கு இந்தியா முழுதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடி கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கோல்கட்டா சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
|
இரங்கல்
கே.கே. மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமிதஷா, காங்., எம்.பி., ராகுல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
யுவன்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இரங்கல் பதிவில் “சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே! நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே.” என்று தெரிவித்துள்ளார்.
ஹாரிஸ்
'என் உயிரின் உயிரே பிரிந்து விட்டதாக உணர்கிறேன்' என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதே போன்று பல்வேறு தலைவர்களும், திரைபிரபலங்களும் பாடகர் கே. கே.-வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் ஏராளமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கே.கே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.