சென்னை:
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 28-ந்தேதியே முடிந்து விட்டது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை.
கோடை வெயில் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் தற்போது ‘பீர்’ விற்பனை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 5,380 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த கடைகளை ஒட்டி 3,240 பார்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் ரூ.85 கோடி முதல் ரூ.90 கோடி வரை மது விற்கப்படுகிறது.
ஆனால் ‘பீர்’ மட்டும் ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பீர் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் விற்பனை வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் குடிமகன்கள் தற்போது அதிகமாக பீர் வாங்குகிறார்கள். இதன் காரணமாக அதன் விற்பனை உயர்ந்துள்ளது.
கோடை வெயில் கொளுத்துவதால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. குளிர்ந்த பீர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் பீர் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பீர் வகைகளை தட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் இருப்பு வைக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.