நாகர்கோவில் புதிய மாநகராட்சி கட்டடத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்புக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்டடத்துக்கு முன்பிருந்த கலைவாணர் பெயரே சூட்டப்படும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை அ.தி.மு.க., – பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே இருந்த கலைவாணர் அரங்கத்தை இடித்துவிட்டு புதிதாக இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஆர் மகேஷ், மாநகராட்சி கட்டடத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்கிற முன்மொழிவை முன்வைத்தார். 1979இல், நாகர்கோவில் மாநகராட்சியின் சிறப்பு அதிகாரி, கட்டிடத்திற்கு கலைவாணர் கலையரங்கம் என பெயர் சூட்டினார். பின்னர், 2019 இல் நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்திற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயரும், மாநாட்டு அரங்கத்திற்கு மார்ஷல் நேசமணி பெயரும் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.
கலைவாணர் பெயர் மாற்றப்பட்டதை எதிர்த்து, அ.தி.மு.க., – பா.ஜக கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. அவர்களுடன் தென்னக மக்கள் இயக்கம் மற்றும் மாவட்ட அனைத்து வேளாளர் சங்கங்கள் இணைந்து கண்டனங்களை எழுப்பினர்.
இப்பிரச்சினை விஷவரூபம் எடுத்திட, கட்டடத்திற்கு கலைவாணர் பெயரை வைக்க கூறியதுடன், பெயர் வைக்கும் முன் அரசின் அனுமதி பெறவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். நாகர்கோவில் மேயராக மகேஷ் பொறுப்பேற்ற பிறகு முன்னெடுக்கப்பட்ட முதல் பெரிய முயற்சி பலனளிக்காமல் போனது.