புதுடில்லி : இந்தியாவில் 2020ல் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,20,806 பேர் பலியாகினர். மேலும் 3,48,279 பேர் காயமடைந்தனர் என மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் சாலை விபத்துகள் அதிகம் நடந்த மாநிலங்களில் தமிழகமும் (45,484) உயிரிழப்பு எண்ணிக்கையில் உத்தரபிரதேசமும் (19,149) முதலிடம் வகிக்கின்றன. தமிழகம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிக சாலை விபத்துகள் நிகழும் மாநிலமாக நீடித்து வருகிறது.
‘இந்தியாவில் 2020ல் பதிவான சாலை விபத்துகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் நாட்டில் 2020ல் 1,20,806 அபாயகரமான விபத்துகள் நடைபெற்றதாகவும் இதில் 43,412 (35.9 சதவீதம்) தேசிய நெடுஞ்சாலையிலும் 30,171 (25 சதவீதம்) மாநில நெடுஞ்சாலைகளிலும் 47,223 (39.1 சதவீதம்) பிற சாலைகளிலும் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் பதிவான 1,37,689 விபத்துகளைக் காட்டிலும் 2020ல் 12.23 சதவீதம் குறைவு. சாலை விதிகளைப் பின்பற்றாததால் 85,032 (64%) விபத்துகள் நிகழ்ந்தன என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement