சென்னை:
பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டை நோக்கி பா.ஜனதா கட்சி பேரணி நடத்தியது.
இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திரண்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நேற்று காலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை தலைமையில் திரண்டு கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பாரதிய ஜனதாவினர் பின்னர் கலைந்து சென்றனர்.
தடையை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஆண்கள், 1000 பேர் பெண்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பால்கனகராஜ் உள்ளிட்ட 10 மாநில நிர்வாகிகளின் பெயரை குறிப்பிட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.