புதுடில்லி: கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
ஜம்மு — காஷ்மீர் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக உள்ளார். இவர் ஜம்மு — காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, அதன் கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்தார். அப்போது, கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நியமனத்தில் ஊழல் நடந்ததாகவும், அதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, பரூக்கின் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, டில்லியில் உள்ள அலுவலகத்தில் ௩௧ம் தேதி ஆஜராக கோரி, பரூக் அப்துல்லாவுக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.இதையடுத்து, டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா நேற்று ஆஜரானார்.
அவரிடம் மூன்று மணி நேரத்துக்கு மேல், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணைக்கு ஆஜராவதற்கு முன், பரூக் அப்துல்லா கூறுகையில், ” ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடந்து முடியும் வரை, எங்களுக்கு இதுபோன்ற நெருக்கடிகளை மத்திய அரசு கொடுக்கும்,” என்றார்.
Advertisement