சென்னை:
மனிதர்களை போலவே செல்ல பிராணிகளுக்கும் காப்பீட்டு திட்டங்கள் இருக்கிறது. ஆனால் சிலர் அவற்றை உபயோகப்படுத்துவதில்லை. அதன் பயன் தெரியாமல் தங்களுடைய செல்ல பிராணிகளுக்காக அதிகம் செலவிடுகிறார்கள்.
உங்களுடைய செல்ல பிராணிகளான நாய், பூனை உடல்நலம் பாதிக்கப்பட்டால் காப்பீடு மூலம் எளிதில் மருத்துவ சிகிச்சை பெற முடியும். தொலைந்து போனாலோ, திருட்டு போனாலோ காப்பீடு செய்வதன் மூலம் அதற்கான தொகையை பெற முடியும். ஆபத்தான நோய்களால் இறந்தாலும் காப்பீடு தொகையை பெறலாம்.
செல்ல பிராணிகளின் இனம், அளவு, வயது ஆகியவை பொறுத்து பிரீமியம் விகிதம் இருக்கும். ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கிறது.
காப்பீடு நிறுவனத்தின் இணையதளத்துக்கு சென்று ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். 7 முதல் 8 தினங்களில் பணத்தை பெறலாம்.
இப்போதைக்கு செல்ல பிராணி காப்பீடு நாய்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. முயல்களுக்கு மட்டுமே இறப்பு பாதுகாப்பு கிடைக்கும். இது படிப்படியாக மாறலாம்.
காப்பீடு நிறுவன அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்ல பிராணிகளுக்கான காப்பீடு தேவை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது என்றார். வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, “நான் சுமார் ரூ.4 ஆயிரம் பிரிமியம் செலுத்தினேன். எனது காப்பீடு ரூ.30 ஆயிரமாகும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சமர்பித்தவுடன் காப்பீடு தொகை வழங்கப்பட்டது” என்றார்.
கடந்த ஆண்டில் செல்ல பிராணி காப்பீட்டு சந்தை ரூ.792 கோடியாக மதிப்பிடப்பட்டு உள்ளது. 2028 ஆண்டுக்கு சுமார் ரூ.1956 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியம் உலகளாவிய செல்ல பிராணி காப்பீட்டு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.