புதுடெல்லி: கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ஆளும் பாஜக ரூ.477.54 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுமார் ரூ.74.50 கோடி மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது.
தேர்தல் சட்ட விதிகளின்படி அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்படி பாஜகவும் காங்கிர ஸும் 2020-21-ம் நிதியாண்டில் தாங்கள் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. இதனை பொதுமக்களின் பார்வைக்கு தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இதன்படி பல்வேறு நிறுவனங்கள், தேர்தல் அறக்கட்டளைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து பாஜக கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ.477 கோடியே 54 லட்சத்து 50,077 நன்கொடையாகப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி நன்கொடையாக ரூ.74 கோடியே 50 லட்சத்து 49,731 பெற்றுள்ளது. இது பாஜக பெற்றதில் 15 சதவீதம் மட்டுமே ஆகும்.
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கடந்த 2014-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட் டணி ஆட்சியை விட்டு இறக்கியது குறிப்பிடத்தக்கது.