சென்னை: குஜராத்தில் நடைபெறும் இரண்டு நாள் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு குஜராத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்களும் மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் தமிழக அரசு சார்பில் துறை செயலாளர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
குஜராத்தில் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநாட்டில் பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார்.