பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து; ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை – அதிர வைக்கும் திருச்சி சம்பவம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வை எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியிருக்கிறார். திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே மாணவி வந்தபோது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் கத்தியை எடுத்து மாணவியை உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி சரிந்த அந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிரிழந்த கேசவன்

இது தொடர்பான விசாரணையில், கடந்தாண்டு இந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கேசவன் (22) என்ற இளைஞர் அழைத்துச் சென்றதும், அவர் மீது போலீஸார் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்ததும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கேசவன் , தொடர்ச்சியாக மாணவியை பின் தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தியதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதையடுத்து தலைமறைவான கேசவன் என்ற வாலிபரை மணப்பாறை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவி கத்தியால் குத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூசாரிப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நள்ளிரவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து திருச்சி ரயில்வே போலீஸார் மற்றும் மணப்பாறை போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். உடனே, இறந்து கிடப்பது கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட கேசவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்திருக்கிறது. அதையடுத்து அவரின் தந்தையை போலீஸார் வரவழைத்து சடலத்தைக் காட்ட, `இறந்து கிடப்பது தன்னுடைய மகன் கேசவன் தான்’ என அவர் உறுதி செய்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து கேசவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருச்சி ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.