`சித்து மூஸ்வாலா கொலைக்கு இரு நாட்களில் பழிவாங்கப்படும்’- ஃபேஸ்புக் பதிவால் புதிய சர்ச்சை

மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவின் படுகொலைக்கு இரண்டு நாட்களில் பழிவாங்கப்படும் என்ற ஃபேஸ்புக் பதிவு, பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான சித்து மூஸ் வாலா (வயது 28), கடந்த 29-ம் தேதி அன்று, தனது சொந்த கிராமமான மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவாஹார்கே கிராமத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 30 முறை அவரது காரை நோக்கி சுடப்பட்டநிலையில், 8 குண்டுகள் தாக்கிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சித்து மூஸ் வாலா.
முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பாதுகாப்பு குறைக்கப்பட்ட 24 மணி நேரத்தில், இந்த கொடூரத் தாக்குதல் நடந்தது. இது அவரது ரசிகர்களிடம் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த படுகொலை சம்பந்தமாக இதுவரை 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சித்து மூஸ் வாலா சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, அவரின் கொலைக்குப் பழிவாங்கப் போவதாக கேங்க்ஸ்டர் நீரஜ் பவானாவுடன் தொடர்புடைய ஃபேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
image
அந்தப் பதிவில், “சித்து மூஸ் வாலா எங்கள் இதயம், அவர் எங்களது சகோதரர். அவரை கொலை செய்தவர்கள் இரண்டு நாட்களில் பழிவாங்கப்படுவார்கள். சித்துவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் நீரஜ் பவானாவின் கூட்டாளிகளான தில்லு தாஜ்பூரியா, கவுஷல் குர்கான் கும்பல் மற்றும் தாவிந்தர் பாம்பியா கும்பலின் பெயர்களும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பல கொலை வழக்குகளில் தண்டனை பெற்று தற்போது நீரஜ் பவானா தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளான தில்லு தாஜ்பூரியா மற்றும் கேங்க்ஸ்டர் டேவிந்தர் பாம்பிஹா ஆகியோரும் திகார் சிறையில் உள்ளனர். நீரஜ் பவானா சிறையில் உள்ள நிலையில், அவரது அக்கெவுண்ட்டில் இருந்து யார் இந்தப் பதிவை போஸ்ட் செய்தது என்று தெரியவில்லை. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
image
இதற்கிடையில் சித்துவின் தந்தை இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக, சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சித்துவின் இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது. சித்துவின் ஆஸ்தான டிராக்டர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது உடல் அதில் கிடத்தப்பட்டது.
இதையும் படிங்க… தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் அப்பாவி பொதுமக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’- போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி
image
பின்னர் வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணை நிலத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சித்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சித்துவின் செல்ல நாய்களான ஷெரா மற்றும் பாஹ்ரா உணவு அருந்தாமல் இருந்து வருவதாக அவரது குடும்பத்தினர் சோகத்துடன் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.