திருப்பதியில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் சுமார் 48 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் காத்திருப்பு அறையான வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டனர்.
திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
இதனால் விஐபி பக்தர்கள், சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கைவிடுத்திருந்தது.
இந்நிலையில், தற்போது கடந்த 4 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பக்தர்கள் சிரமம் இன்றியும் வேகமாகவும் தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 69,848 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,716 முடி காணிக்கை செலுத்தினர். 4.34 கோடி உண்டியல் வசூலானது. வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.