லெஸ்பியன் தோழியுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சியை தருகிறது- இளம்பெண் பேட்டி

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா. இருவரது பெற்றோரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தனர். இதனால் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படித்தனர்.

அப்போது ஏற்பட்ட நட்பு, இவர்களின் கல்லூரி வாழ்க்கையின் போதும் தொடர்ந்தது. இதற்காக இருவரும் தனியாக தங்கி இருந்தபோது இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு அது லெஸ்பியன் உறவாக மாறியது.

ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவருக்கும் இடையேயான லெஸ்பியன் உறவு பற்றி தெரிந்துகொண்ட உறவினர்கள், பாத்திமா நூராவை கேரளா அனுப்பி விட்டனர்.

இதனை அறிந்த ஆதிலா நஸ்ரின், தோழியை தேடி கேரளா வந்தார். இங்கு பாத்திமா நூராவை கண்டுபிடித்தார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக தங்கி இருந்தனர்.

அவர்கள் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த பாத்திமா நூராவின் உறவினர்கள், அங்கு சென்று பாத்திமா நூராவை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.

பாத்திமா நூராவை கடத்தி சென்ற உறவினர்கள், அதன்பின்பு அவரை சந்திக்க ஆதிலா நஸ்ரினை அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிலா நஸ்ரின், தோழியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

அதோடு தங்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாகவும், எனவே தாங்கள் சேர்ந்து வாழ கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு ஆதிலா நஸ்ரின் மற்றும் அவரது தோழி பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.

மேலும் அவர்களுக்கு உறவினர்கள் இடையூறு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டது. கேரள ஐகோர்ட்டு வழங்கிய இந்த பரபரப்பு தீர்ப்பு குறித்து ஆதிரா நஸ்ரின் கூறியதாவது:-

என்னிடம் இருந்து பாத்திமா நூராவை அவரது உறவினர்கள் கடத்தி சென்றதும், நான் உடைந்து போனேன். அவரை மீட்க பல்வேறு போராட்டங்களை நடத்தினேன். ஆனால் பாத்திமா நூராவின் பெற்றோர், அவரை மனமாற்ற முயற்சி செய்தனர்.

இதற்கு பாத்திமா நூரா இடம் கொடுக்கவில்லை. அவரும் என்னுடன் சேர்வதில் உறுதியாக இருந்தார். எனவே நான் கோர்ட்டில் மனு செய்தேன். கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தாலும், இந்த சமூகமும், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சேர்ந்திருந்தபோது பெற்றோர் என்ன சொல்வார்கள், இந்த சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா? என்ற சந்தேகம் இருந்தது.

இப்போதுதான் அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வந்துள்ளோம். இனி நிம்மதியாக எங்கள் வாழ்க்கையை தொடங்குவோம்.

ஒன்றாக படித்தபோது, சேர்ந்து சுற்றிய போது ஏற்பட்ட நட்பும், அதனால் உருவான பாசமும் எங்களை இணைத்தது.

அந்த இணைப்பை தொடர வேண்டும் என்று விரும்பினோம். உறவுகள் எதிர்த்ததால், சேர்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வு அதிகரித்தது. அதுதான் எங்களை இந்த எல்லைவரை கொண்டுவந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.