சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுவருகிறது. ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகத்தை தொடர்ந்து சென்னை விஐடி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. இங்கு மட்டும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
விஐடி பல்கலைகழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநில மாணவர்களும் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, பரிசோதனை நடத்தப்பட்டது. தினந்தோறும், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை, 1,200க்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “கேளம்பாக்கத்தில் விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது. கல்வி நிறுவன வளாகத்தை நேரில் ஆய்வு செய்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். உணவு அரங்கு , விடுதி அறை என அனைத்திலும பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கொரோனா பாதித்தவர்களில் 99% பேரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளது
முன்னதாக, சென்னை ஐஐடியில் 198 பேருக்கு, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100ஆக பதிவாகி வருகிறது.