நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நாடு விடுதலைக்கு முன்னர், அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம், ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகி வந்தது. இப்பத்திரிகை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்தது. ஆனாலும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது. பின் 2010 ஆம் ஆண்டில் அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் உள்ளன.
இதற்கிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, வரும் 8 ஆம் தேதி புதன் கிழமை, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இது குறித்து, காங்கிரஸ் எம்பியும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வழக்கில் பண மோசடி அல்லது பணப் பரிவர்த்தனைக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணைக்காக, 8 ஆம் தேதி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராவார்கள் எனக் கூறப்படுகிறது.