திருவனந்தபுரம்: கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை நீடிக்கும். பின்னர் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, நவம்பர் வரை பெய்யும். சில வருடங்களில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிப்பதும் உண்டு. இதேபோல் மார்ச் முதல் மே மாதம் வரை கோடை மழையும் பெய்யும்.இந்தாண்டு கேரளாவில் கோடை மழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்துள்ளது. கடந்த மார்ச் 1 முதல் மே 31ம் தேதி வரை 92 நாட்களில் 85 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. சராசரியாக இந்த நாட்களில் கேரளாவில் 361.5 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இந்தாண்டு 668.5 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இந்தாண்டு எர்ணாகுளம் மாவட்டத்தில் தான் கோடை மழை மிக அதிகமாக பெய்துள்ளது. 2வது இடத்தில் கோட்டயமும், 3வது இடத்தில் பத்தனம்திட்டா மாவட்டமும் உள்ளது. கேரளாவில் இந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக அதிக கோடை மழை பெய்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் வழக்கத்தைவிட 152 சதவீதமும், கோட்டயம் மாவட்டத்தில் 124 சதவீதமும் கூடுதல் மழை கிடைத்துள்ளது. இதற்கிடையே இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது. தற்போது மழை குறைவாக பெய்து வருகின்ற போதிலும் வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.