‘பறையா’ என்ற சொல்லை பயன்படுத்தியதால் சர்ச்சை- மீண்டும் விளக்கம் அளித்த அண்ணாமலை

சென்னை:
பிரதமராக மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பறையர் என்ற சொல்லை அண்ணாமலை பயன்படுத்தியது கடும் சர்ச்சையானது. 
அண்ணாமலையின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரித்தார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எச்சரிக்கை என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார். 
“பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை-வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட  மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி  @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும்” என வன்னி அரசு கூறியிருந்தார். 
இதற்கு அண்ணாமலை பதில் அளித்து ட்வீட் செய்திருந்தார். அதில், “அண்ணா வணக்கம்! கத்தியை விட நம் புத்தி கூர்மை  என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில – தமிழ் அகராதி  வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்!’ என குறிப்பிட்டு மேக்மிலன் அகராதியின் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பியிருந்தார்.
இதற்கும் வன்னி அரசு விளக்கம் அளித்தார். ‘பறையா என்பது இழிவுபடுத்த (offensive) பயன்படுத்தப்படும் பெயர் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி குறிப்பிடுகிறது. நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவமதிப்பு. பறையாவும் அப்படிதான். மேலும்,பறையா என்பது வரலாற்று அடிப்படையில் தென்னிந்தியாவில் உள்ள தொல்குடி பறையர் சமூகத்தை சேர்ந்தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறையா என்று சொன்னால்  தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது சட்டம்’ என வன்னி அரசு குறிப்பிட்டார். 
இந்த விவகாரம் தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், அண்ணாமலை  தனது கருத்து தொடர்பாக மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கை சகோதர சகோதரிகள் நான் ஒரு பதிவில் பயன்படுத்திய ‘pariah’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருந்தார்கள்! 
நான் ‘Pariah’ எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன். அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள்
இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே!
இவ்வாறு அண்ணாமலை  கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.