கேகே என அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது, இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளதற்கிடையே, அவரது மரணத்தை இயற்கைக்கு மாறான மரணமாக கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழில் மின்சாரக் கனவு படத்தில் ஸ்டாபெர்ரி பெண்ணே, அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டைக்காரி, சிம்பு நடித்த மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
பிரபல பாடகர் கேகே மறைவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேகே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்படும் என மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் இன்று மதியம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் அவருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.