இருசக்கர வாகனம் வாங்கி தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் குஞ்சரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், மது போதையில் தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கிதரகோரியுள்ளார்.
அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவர் அறைக்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் அறைகதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, ரியாஸ் தூக்கில் தொங்கினார். உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்துவந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.