ராய்காட் : கணவன் தினமும் சித்ரவதை செய்ததால், ஆறு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள காரவலி கிராமத்தில் வசிக்கும் சிகுரி சாஹ்னி, 30, என்ற பெண்ணுக்கு ஒன்றரை வயது ஆண் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் ஆறு குழந்தைகள் இருந்தனர். கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து அந்தப் பெண்ணை சித்ரவதை செய்துள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண், நேற்று முன்தினம், தன் ஆறு குழந்தைகளையும் அதே ஊரில் உள்ள ஒரு கிணற்றில் வீசினார். அவரும் கிணற்றில் குதிக்க முயன்ற போது அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்து அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினர். கிராம மக்கள் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கிய குழந்தைகளை மீட்டனர். ஆனால், ஆறு பேருமே உயிரிழந்திருந்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். கணவனிடமும் விசாரணை நடக்கிறது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இந்த தம்பதி வேலை தேடி மஹாராஷ்டிராவுக்கு வந்துள்ளனர்.
6 குழந்தைக்கு விஷம்!
மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாசை கிராமத்தில் வசிக்கும் ராயன், 31, அவரது மனைவி பூனம்,30, இருவரும் தங்களது 6 வயது மகளுடன் தானே நகருக்கு 29ம் தேதி வந்தனர். அங்கு, ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் காலையில், ஹோட்டல் ஊழியர்கள் அந்த அறைக்கு சென்ற போது, அந்தப் பெண்ணும், குழந்தையும் கட்டிலில் அசைவின்றி கிடந்தனர். போலீசார் வந்து பார்த்த போது குழந்தை வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தது. பூனம் மயக்க நிலையில் இருந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள ராயன் — பூனம் தம்பதி முடிவு செய்துள்ளனர். முதலில் விஷம் கலந்த உணவை குழந்தைக்கு ஊட்டியுள்ளனர். பின், இருவரும் சாப்பிட திட்டமிட்டுள்ளனர். ஆனால், மனைவியை மட்டும் சாப்பிட வைத்து ராயன் தப்பியுள்ளார். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement