நடிகர் மகன் கைது வழக்கு; சர்ச்சை அதிகாரி இடமாற்றம்| Dinamalar

புதுடில்லி : போதைப் பொருள் வைத்திருந்ததாக ஹிந்தி நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சர்ச்சை அதிகாரி சமீர் வான்கடே, சென்னையில் உள்ள வருமான வரிதாரர் சேவைகள் இயக்குனரகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு இயக்குனரக தலைவர் சமீர் வான்கடே அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், சோதனையின் போது ‘வீடியோ’ எடுப்பது, கைதானோரை மருத்துவ பரிசோதனை செய்வது உள்ளிட்ட பல நடைமுறைகளை சமீர் வான்கடே பின்பற்றாதது தெரியவந்தது. மேலும், ஆர்யன் கானை விடுவிக்க சமீர் வான்கடே லஞ்சம் கேட்டதாகவும் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சமீர் வான்கடே மும்பையில் உள்ள இடர்பாடு மேலாண்மை இயக்குனரகத்திற்கு மாற்றப்பட்டார். ஆர்யன் கான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.இதற்கிடையே சமீர் வான்கடே பணியில் சேர போலி சாதி சான்றிதழ் அளித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சமீர் வான்கடே சென்னையில் உள்ள வருமான வரிதாரர் சேவைகள் இயக்குனரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.