பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் சந்திராபிரகாஷ் திவேதி இயக்கத்தில் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘சாம்ராட் பிருத்விராஜ் (Samrat Prithviraj)’. இப்படம் சாம்ராட் பிருத்விராஜ் சௌகான் என்னும் இந்திய மன்னரின் வாழ்க்கைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அக்ஷய் குமார், இந்திய அரசர்களைப் பற்றி யாரும் வரலாற்றுப் புத்தகங்களில் எழுதவில்லை என்றும், நமது வரலாற்றுப் புத்தகங்களில் அவர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கல்வி அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது பற்றி மேலும் பேசிய அவர், “துரதிர்ஷ்டவசமாக, நம் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் சாம்ராட் பிருத்விராஜ் சௌகானைப் பற்றி 2-3 வரிகள் மட்டுமே உள்ளன. ஆனால் படையெடுப்பாளர்களைப் பற்றி நிறைய குறிப்பிடப்பட்டுள்ளது. நமது கலாசாரம் மற்றும் நம் மகாராஜாக்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று கூறினார்.
மேலும், “முகலாயர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதே சமயம் நம் இந்திய மன்னர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களும் சிறந்தவர்கள்தான்” என்றும் கூறியுள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த வீடியோ வைரலானதையடுத்து, அதற்குப் பதிலடியாக, பலரும் பிருத்விராஜ் சௌகான் குறித்து வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களின் ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பிருத்விராஜ் குறித்து பல புத்தகங்களில் பாடங்கள் இருப்பதாகவும் மேற்கோள் காட்டிவருகின்றனர்.