தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்தது: தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பங்கேற்கவில்லை

காந்திநகர்: புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிப்பதற்காக குஜராத்தில் நடக்கும் 2 நாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவில்லை. குஜராத்தின் காந்தி நகரில் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாள் நடக்கும் இம்மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கை, பள்ளிகளின் திறன் மற்றும் தேசிய டிஜிட்டல் கல்வி, தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் போன்ற டிஜிட்டல் முன்முயற்சிகளை மையமாகக் கொண்டு, நாட்டின் கல்விச் சூழலை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பல்வேறு மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.கடந்த பல மாதங்களாக புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி புறக்கணித்துள்ளார். ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த கல்விக் கொள்கையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும், கல்வி கற்போரின் எண்ணிக்கை வெகுவாக குறையும், கற்றல் திறனும் குறையும் என பல தரப்பிலும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், தமிழகத்தில் தற்போது, புதிய தேசியக் கல்விக் கொள்கையை விட சிறந்த கல்விக் கொள்கை பின்பற்றப்படுவதால் சிறந்த அறிஞர்கள் பலர் தமிழகத்தில் உருவாகி உள்ளனர். இதனால், தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசும் இருப்பதால், தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசைப் போல், பாஜ.வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட பிற மாநில அரசுகளும் இம்மாநாட்டை புறக்கணித்துள்ளன. மாநாட்டின் முதல் நாளான நேற்று மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் அனைவரையும், குஜராத்தின் கல்வி நிறுவனங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுற்றிக் காட்டினார். மாநாட்டின் முக்கிய அம்சமான, புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன. அதே போல், கர்நாடகா மாநிலத்தில் பாட நூல்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய மாற்றங்கள் செய்ய அம்மாநில பாஜ அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் இன்றைய மாநாட்டில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.