புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரின் ஸ்ரீவார்ஷ்னே கல்லூரியின் பேராசிரியர் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பால், அவரை ஒரு மாதம் கட்டாய விடுப்பில் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
புகழ்பெற்ற அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரில் இயங்கி வருகிறது ஸ்ரீவார்ஷ்னே கல்லூரி. கடந்த 1922ல் சிறிய அளவில் ஒரு பள்ளிக்கூடமாகத் துவங்கிய இது, படிப்படியாக வளர்ந்து 1947ல் கல்லூரியானது. இதில், பயிலும் சுமார் 6,000 பேரில் அதிகமாக 4,000 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். உபி அரசின் உதவிபெறும் கல்லூரியான இது, ஆக்ராவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியின் சட்டத்துறை பேராசிரியராக எஸ்.ஆர்.காலீத் என்பவர் பணியாற்றிவருகிறார். இஸ்லாமியரான இவர், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தின் புல் தரையில் சிறப்புத் தொழுகை நிறைவேற்றி உள்ளார். இதை ஒரு மாணவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட, இதை கண்ட உத்தரபிரதேச இந்துத்துவா அமைப்புகள் பேராசிரியர் காலீத் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியத்தை கண்டித்தனர். இத்தோடு, அலிகரின் மற்றொரு கல்வி நிறுவனமான டி.எஸ்.கல்லூரியின் மாணவர்கள் பேரவை சார்பில் அப்பகுதியின் குவார்ஸி காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.
பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய யுவ மோர்ச்சா மற்றும் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரதிய வித்தியா பரிஷத் சார்பில் ஆர்பாட்டமும் நடத்தப்பட்டது. காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், ‘பேராசிரியர் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தி அமைதியை குலைக்க முயற்சித்துள்ளார். பொது இடத்தில் அவர் நடத்திய தொழுகை மதவாதத்தை பரப்பும் ஒழுங்கீன செயலாகும்’ என மாணவர் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் நடவடிக்கை எடுக்கும் வரை உபியின் அனைத்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், வேறுவழியின்றி ஸ்ரீவார்ஷ்னே கல்லூரி நிர்வாகம் சார்பில் பேராசிரியர் தொழுகை நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர் எஸ்.ஆர்.காலீத் தவறு செய்தாரா? இல்லையா? என்பதை உறுதி செய்யக் கேட்டிருக்கிறது.
விசாரணை முடியும்வரை, பேராசிரியர் காலீத்தை ஒரு மாதத்திற்காகக் கட்டாய விடுப்பிலும் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பேரவையின் புகாரைப் பதிவு செய்த காவல்துறையினர், கல்லூரி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் தான் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதுபோல், அலிகர் கல்லூரிகளில் முஸ்லீம் மதத்தின் பேராசிரியர்களும், மாணவர்களும் தொழுகை நடத்துவது முதன்முறையல்ல. எனினும், தற்போது மாநிலத்தின் சூழல் மாறிவருவதன் காரணமாக தொழுகை நடத்துவது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர்.