இலங்கைக்கு டொலர்கள் புதிய முயற்சி

வெளிநாட்டினருக்கு நீண்ட கால விசா வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

அதனூடாக, நாட்டிற்குள் அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு வழியை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

“கோல்டன் பரடைஸ் விசா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் ஊடாக விசா வழங்கப்படும்.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை (100000) வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இலங்கையில் வதிவிட விசா வழங்கப்படும்.

இவ்வாறு வைப்புச் செய்யும் வெளிநாட்டவர்கள் முதல் வருடத்திற்குப் பின் 50,000 டொலர்களை திரும்பப் பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 50,000 டொலர்களையும் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக குறித்த கணக்கில் தொடர்ந்தும் வைக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும்.

இதேவேளை, இலங்கையில் குறைந்தபட்சம் 75,000 டொலர்களை அல்லது அதற்கு மேலதிகமான தொகையை சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக செலவழிக்கும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.