புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் சோனியா, ராகுல் காந்தி வரும் 8ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 1938ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மற்றும் 5,000 சுதந்திரப் போராட்ட வீரர்களால் தொடங்கப்பட்டது ‘‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனம். சுதந்திரத்திற்கு பிறகு இந்நிறுவனம் காங்கிரசின் குரலாக ஒலித்து வந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு 90 கோடிக்கும் மேலான கடன் சுமையால் மூடப்பட்டது. இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடங்கிய ‘‘யங் இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனம் 2010ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 1,057 பங்குதாரர்களுடன் ஆலோசிக்காமல், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு தொடங்கிய ‘யங் இந்தியா’ நிறுவனத்துடன் மாற்றியதில் முறைகேடாக 2,000 கோடி ரூபாய் வரை ஆதாயம் அடைந்துள்ளதாக கூறி பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்நிலையில், பணம் மோசடி மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை கீழ் 2014ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 2015ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வரும் வழக்கில் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கியது. மேலும், இதே வழக்கில் 2016ம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா, சுமந்த் துபே, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்தது. இவ்வழக்கில் இறுதியாக அமலாக்கத்துறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு கடந்த 2021ம் ஆண்டு நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தியது. இந்நிலையில் மேற்கொண்டு வழக்கு விசாரணை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் டெல்லி அமலாக்க துறை, ஜூன் 8ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நேற்று சம்மன் அனுப்பியது. 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய வகையில் மத்திய புலனாய்வு அமைப்புகள் பழைய வழக்குகளின் விசாரணைகளை மீண்டும் விசாரிக்க தொடங்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.