புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.கோழி இறைச்சியில் சமைக்கப்படும் ‘ஷவர்மா’ சாப்பிட்டு, கேரளாவில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதையடுத்து, புதுச்சேரியில் உள்ள ஓட்டல்கள், தெருவோர உணவகங்கள், பேக்கரி, பழக்கடை, இறைச்சி கடைகள் மற்றும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., ரட்சனாசிங் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ராஜிவ் சிக்னல் மற்றும் சாரம் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.அப்போது, சமையலுக்கு தயார் நிலையில் வைத்திருந்த இறைச்சி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தரமானவையா என ஆய்வு செய்தனர்.உணவுப் பொருட்கள் தயாரிக்க தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.முன்னதாக, ஓட்டல்கள் செயல்படுவதற்கான உரிமம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழங்கியுள்ள தடையில்லா சான்றிதழ் ஆகியவைகளையும் எஸ்.பி., ரட்சனா சிங் ஆய்வு செய்தார்.
Advertisement