இலங்கையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
எனினும் இந்த பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி, சுங்க வரி மற்றும் மேலதிக கட்டணம் ஆகியவற்றை கணிசமாக உயர்த்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி உரிமங்களைப் பெறுவதை கட்டாயமாக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கட்டுப்பாடுகள் தளர்வு
எனினும் இந்த கட்டுப்பாடு தற்போது தளர்த்தப்பட்டுள்ளதுடன், தீர்வை மற்றும் வரிகள் உட்பட பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு, ஜூன் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் இன்றி குறித்த பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தயிர், பாலாடைக்கட்டி, திராட்சை, அப்பிள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல உணவுப் பொருட்களுக்கான வரி உயர்த்தப்படவுள்ளது.
நிலவும் அந்நிய செலாவணி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த பொருட்களின் இறக்குமதியை ஊக்கப்படுத்த இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு முறைசாரா வழிகளில் பொருட்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுவதாகத் கருதுவதால், இது தொடர்பான ஏனைய விதிமுறைகளை வெளியிட நிதி அமைச்சகம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இறக்குமதி வரி, சுங்க வரி அதிகரிப்பு
அத்துடன் இலங்கை நிதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய சிறப்புப் பண்ட வரிச் சட்டத்தின் பிரிவு 2 மற்றும் வருவாயின் பிரிவு 2 ஆகியவற்றின் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி, சுங்க வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை கணிசமாக அதிகரிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்பிரகாரம் ஒரு கிலோ கிராம் இறக்குமதி செய்யப்படும் தயிருக்கு 1,000 ரூபாவாக காணப்படும் சிறப்பு கலால் வரி 2,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து வகையான பாலாடைக்கட்டி மீதும் ஒரு கிலோகிராமிற்கு 400 ரூபாவாக காணப்பட்ட சிறப்பு கலால் வரி 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் முழு விபரம்
ஒரு கிலோக்கிராம் ஓரஞ்சு பழத்தின் மீதான கலால் வரியை 200 ரூபாவில் இருந்து 600 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் திராட்சைக்கான சிறப்பு கலால் வரி, 300 ரூபாவில் இருந்து 600 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
சொக்லேட் மற்றும் கொக்கோ இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீயர், வைய்ன், விஸ்கி மற்றும் வொட்கா உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்களுக்கு சுங்க வரி 100 வீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு 100 வீத கூடுதல் கட்டணமும், வெளிநாட்டு வாசனை திரவியங்களுக்கு 75 வீத கூடுதல் கட்டணமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா மற்றும் வெளிநாட்டு காலணிகளுக்கான இறக்குமதியில் சுங்க வரியில் விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 75 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஷாம்புகளுக்கு 75 வீத கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதுடன், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான டயர்களை இறக்குமதி செய்வதற்கும் சுங்க வரியில் 50 வீத கூடுதல் கட்டணம் அறவிடப்படவுள்ளது.
குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் மின்சார அடுப்புகளின் இறக்குமதிக்கு 100 வீத கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
குளிரூட்டிகளின் இறக்குமதியில் சுங்க வரியில் 100 வீத கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்பதுடன், இசைக்கருவிகளை இறக்குமதி செய்வதற்கும் 100 வீத கூடுதல் கட்டணம் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.